×

பைப்லைன் உடைந்ததால் கோயம்பள்ளி-சோமூர் சாலை சேறும், சகதியாக மாறிய அவலம்

கரூர், ஏப். 10: கரூர் கோயம்பள்ளி பகுதியில் இருந்து சோமூர் செல்லும் சாலை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம் கோயப்பள்ளி பகுதியில் இருந்து சோமூர், திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் தார்ச்சாலை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. இதனால், இந்த பகுதியினர், செல்லிபாளையம் வழியாக சோமூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு பள்ளியின் வழியாக சோமூர் செல்லும் இந்த சாலையை புதுப்பிக்கும் வகையில் பொக்லைன் மூலம் சாலை பெயர்க்கப்பட்டு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளும் நிலையில் இருந்தது. தற்போது பணிகள் தொடராத நிலையில், சாலையோரம் பைப் லைன் உடைந்ததால் தண்ணீர் வெளியேறி மண்சாலை சேறும், சகதியாக மாறிவிட்டதால் சாலையில் நடந்து செல்லக் கூட முடியாத நிலையில் உள்ளது. இதனால், பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சோமூர் பகுதியில் இருந்தும் கோயம்பள்ளி பகுதிக்கு மக்கள் வருவதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.எனவே, மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Coimbatore-Somur road ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா