45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சீல் வைக்கப்படும் 15ம் தேதி வரை அவகாசம் அளித்து கலெக்டர் எச்சரிக்கை தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும்

வேலூர், ஏப்.10:வேலூர் மாவட்ட தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடாவிட்டால் சீல் வைக்கப்படும். வரும் 15ம் தேதி வரையில் அவகாசம் வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ெகாரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:

இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 1.26லட்சமாக அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 200பேரில் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் 200 பேரில் 4பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போது ஒரு நாளைக்கு 91பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரித்துவிட்டது. கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பு பொதுமக்களுக்கு ஜிங்க் மாத்திரை, கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது நம்மிடம் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற கொரோனா தடுப்பூசிகள் உள்ளது. எனவே 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 98,134 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 சதவீதம் போடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட தேவையில்லை. 15லட்சம் மக்கள் தொகையில், 5.97லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே வேலூரில் தான் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா 2வது அலை வேகமாக பரவுகிறது. முதல் அலையைவிட 2வது அலையில் பாதிப்பு 2.5சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,200 படுக்கைகள் மட்டுமே உள்ளது. பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, தனியார் கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டு இருந்தது. தற்போது பெரியார் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக உள்ளதால் மீண்டும் கொரோனா மையமாக மாற்றுவது கடினம்.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் தான் ஒரேவழி. முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள், 4வாரம் முடிந்த உடனே தடுப்பூசி போடவேண்டிய அவசியம் இல்லை. 8 வாரம் கழித்துகூட 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த தெரு முழுவதும் சீல் வைக்கும் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும். தொழிற்சாலைகள், உணவு விடுதி, வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்மந்தப்பட்ட கடை, நிறுவனங்களுக்கு பாரபட்சமின்றி சீல் வைக்கப்படும். ஜமாத், சர்ச்களில் அரசு அதிகாரிகள் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. சங்கங்கள் மூலமாக முகாம் நடத்தி முதல்டோஸ் போட்டுவிட்டு விட்டு விடாதீர்கள் 2வது டோஸ் போடுவதற்கும் முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் டிஆர்ஓ பார்த்தீபன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் செல்வி, மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், மாநகர் நல அலுவலர் சித்ரசேனா, ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், காவல்துறையினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், மண்டபம், வணிகவளாக உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து 1,200 பெட் வசதி மட்டுமே உள்ளது. முன்பு சாலையில் மாஸ்க் அணியாமல் சென்றால் அவர்களுக்கு உடனே பரிசோதனை செய்தோம். ஆனால் தற்போது சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனைக்கு முக்கியத்துவம் தரப்படும். தற்போது நம்மிடம் கொரோனா தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

நேதாஜி மார்க்கெட் இடமாற்றம்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும். காய்கறி மார்க்கெட் மாங்காய் மண்டிக்கு இடமாற்றம் செய்யப்படும். அதேபோல் பூ மார்க்கெட் ஊரிசு பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். தற்காலிக கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் ஒருவாரத்தில் இடமாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.கடை வைப்பதில் அரசியல் தலையீடு

மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டில், வெளியாட்களும் கடைகள் வைத்து விடுகின்றனர். அரசியல் தலையீடுகளும் உள்ளது. எனவே நேதாஜி மார்க்கெட்டில் உள்ளவர்கள் மட்டும் காய்கறி கடைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காய்கறி மண்டி வியாபாரிகள் முன்வைத்தனர். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.மாஸ்க் இல்லையா? பொருட்கள் வழங்காதீர்

காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகைகடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளிலும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று கூட்டத்தில் வணிகர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

Related Stories: