செங்கல்பட்டு நகராட்சியில் அவலம் மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பை

செங்கல்பட்டு, ஏப்.9: செங்கல்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நகராட்சியில், தினமும் வீடுகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் இருந்து டன் கணக்கில் குப்பைகள் சேர்கிறது. இந்த குப்பைகளை நகராட்சி மூலம் உடனுக்குடன் அகற்றாததால், வார்டுகளில் குப்பை மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பையுடன் கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு சிக்குன் குன்யா, டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செங்கல்பட்டு நகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதில்லை. பொதுமக்கள் அதிகம் கூடும் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட், ராட்டின கிணறு, கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் குப்பை பெயரளவுக்கு அள்ளப்படுகிறது. நகராட்சியின் உள்பகுதிகளான நத்தம், அனுமந்தபுத்தேரி, பச்சையம்மன் கோயில், தண்டுக்கரை, வேதாச்சலம் நகர், அளகேசநகர்  உள்பட பல பகுதிகளில் குப்பை அகற்றாமல் தேங்கியுள்ளது. இதுதொடர்பாக,  நகராட்சி அதிகாரிகளிடம், பலதுறை புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே, இந்த நகராட்சியில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

பாதாள சக்கடை திட்டம் நிறைவேற்றாமல் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் உள்ளதால், கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகிறது. இதனால், காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தற்போது மாநிலத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமான மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளது. நகரிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றவேண்டும். நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கவேண்டும்.  நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என்றனர்.

Related Stories: