இளம்பெண் சாவில் மர்மம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம், ஏப். 9: மதுராந்தகம் அருகே இளம் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் உட்பட கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்த கெண்டிரச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு (28). இவரது மனைவி செல்வராணி (24). இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். செல்வராணி தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர். இவர்கள் குடும்பத்துடன் கெண்டிரச்சேரி கிராமத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சின்னராசு வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது, செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வராணிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், செல்வராணியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மதுராந்தகம் - சித்தாமூர் நெடுஞ்சாலையில் கெண்டிரச்சேரியில் திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம். இதனை கொலை வழக்காக பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறிலயில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரசம் பேசினர். அப்போதுது, இந்த வழக்கை முழுமையாக விசாரிப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: