ஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்

செய்யூர், ஏப். 9: கடப்பாக்கம் - ஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் தொழில் போட்டியின் காரணமாக மீன் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் பஜார் பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு மீன்கள் விற்கும் வியாபாரிகளுக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பஜார் பகுதி அருகிலேயே பல லட்சம் மதிப்பில் மீன் சந்தை கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மீன் சந்தை கட்டிடம் அமைத்து கொடுக்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே மீன் வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்து வந்தனர்.

பின்னர், ஒரு சில மீன் வியாபாரிகள் மற்ற மீன் வியாபாரிகளிடம் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, மீன் சந்தை கட்டிடத்தில் இருந்து சாலையோரம் தங்களது கடைகளை அமைத்தனர். நாளடைவில் வியாபாரிகள் ஒவ்வொருவராக தங்களது கடையினை சாலையோரம் அமைத்து கொண்டனர். இந்நிலையில், தற்போது மீன் வியாபாரிகள் அவ்வழியே செல்லும் சாலையை ஆக்கிரமித்து, மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதனால், கடப்பாக்கத்தில் இருந்து அலம்பரைக்குப்பத்துக்கு சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வழியாக ஆலம்பரைக்கோட்டை சுற்றுலா தளத்துக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அவ்வழியாக கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடைக்கழிநாடு பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு சாலை ஆக்கிரமித்துள்ள மீன் கடைகளை அகற்ற  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: