கரூர் - ராஜகுளம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மெகா பள்ளங்கள்: அடிக்கடி விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத், ஏப், 9: கரூர் கிராமம் அருகே தரைபாலத்தில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை - ராஜகுளம் வரை செல்லும் புறவழிச்சாலையில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்பட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் செங்கல்பட்டு, மறைமலைநகர், ஒரகடம், வாலாஜாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து பொருட்களை ஏற்றி கொண்டு ஆந்திரா, கர்நாடகா உள்பட பல  மாநிலங்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட லாரிகள், இச்சாலை வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், இந்த சாலையை ஒட்டியுள்ள கரூர் கிராமத்தின் அருகில்  தரைப்பாலம் உள்ளது.  இந்த தரைப்பாலம் கடந் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதிக பாரம் கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால், இந்த தரைப்பாலம் சிதலமடைந்து உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும், இந்த தரைப்பாலம் உள்ள பகுதியில் இரவு நேரங்களில் தெரு விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த பாலத்தில் அடுத்தடுத்து மெகா பள்ளங்கள் தோன்றியுள்ளது. பைக்குகளும், கார்களும் செல்லும்போது அந்த பள்ளங்களில் சிக்கி தினமும் விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதுகுறித்து,  கிராம மக்கள் கூறுகையில் வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை  முதல்  ராஜகுளம் வரை செல்லும் புறவழிச்சாலை இந்த சாலையில் தினமும் தொழிற்சாலைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட  லாரிகள் சென்று வருகின்றன. கரூர் கிராமத்தின் அருகில் உள்ள தரைப்பாலத்தின் மையப்பகுதியில்  அடுத்தடுத்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த தரை பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டு, தரைப்பாலத்தில் அமைந்துள்ள மெகா பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: