கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு சமயபுரம், வெக்காளியம்மன் கோயில் ேதரோட்டம் ரத்து?

திருச்சி, ஏப்.9: கடந்த 2019 ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று அடுத்து உலக நாடுகள் அனைத்திலும் பரவியதை அடுத்து கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற பெயரில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியதை அடுத்து கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. தற்போது கொரோனா பரவுதல் எண்ணிக்கை தினமும் கூடுதலாகி வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கொரோனா ெதாற்று பாதிப்பு எண்ணிக்கை வேகமாக பரவுவதை அடுத்து அரசு, வரும் 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணத்தில் 100 பேர் கலந்து கொள்ள வேண்டும். இறப்பு சடங்குகளில் 50 பேர் பங்கேற்க வேண்டும். கேளிக்கை மற்றும் திரையரங்கில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி. பஸ்களில் நின்று கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் திருச்சியில் முக்கிய திருவிழாவான உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதற்காக காப்பு கட்டுதலுடன் விழா தினமும் நடந்து வருகிறது. அதுபோல் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பூத்திருவிழா முடிந்து தற்போது சித்திரை ேதரோட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு கோயில்களிலும் தேரோட்டம் நடக்குமா என்பதை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: