தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு ரத்து

ஈரோடு, ஏப். 9: தேர்தல் பணியாற்றிய நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு சிஇஒ உத்தரவின் பேரில் தற்செயல் விடுப்பு போடப்பட்டுள்ளதை ரத்து செய்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நேற்று முன்தினம் பிற்பகலில் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டிருந்தார். பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு என்று வருகை பதிவேட்டில் பதிவு செய்யும்படியும் தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டிருந்தார். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் அதிகாலை வரை ஆசிரியர்கள் பணியாற்றிய நிலையில், பிற்பகலில் பள்ளிக்கு வர வேண்டும் என்ற முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் மட்டும் அரசின் உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக இதுபோன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறி ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்து கலெக்டர் கதிரவனிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு என்பதற்கு பதிலாக, அயல் பணி என்று பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் போர்க்கொடி

பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்தவர்களுக்கு அயல் பணி என்று குறிப்பிடப்பட்ட நிலையில், சிஇஒ உத்தரவை மதித்து பள்ளிக்கு வந்தவர்களுக்கு எந்த சலுகையும் காட்டப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். எனவே பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு, அதை ஈடுகட்டும் வகையில் வேறொரு நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: