மருத்துவமனைகளில் தீ தடுப்பு பயிற்சி கூட்டம்

ஈரோடு, ஏப். 9: ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்தினை தடுப்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்தினை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் சார்பில் நேற்று பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமை தாங்கினார். உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது: 2 தளங்களுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள், தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த உபகரணங்களை மருத்துவமனையின் நிர்வாகிகள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தீ தடுப்பான் கருவியை கொண்டு அணைக்க வேண்டும்.

தண்ணீரை கொண்டு அணைத்தால் மேலும் மின் கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும். மருத்துவமனைகளில் ஜெனரேட்டரில் ஆயில் கசிவால் ஏற்படும் தீயை தண்ணீரை பயன்படுத்தி அணைக்காமல் தீ தடுப்பான் கருவியை பயன்படுத்தி அணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து தீ தடுப்பான் கருவையை உபயோகப்படுத்தும் செயல் முறை விளக்கமும் தீயணைப்பு வீரர்கள் சார்பில் மருத்துவமனையின் நிர்வாகிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ், தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: