கொரோனா நோய் தடுப்பு விதிகளை மீறும் திருமண மண்டபங்கள் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்படும்

நாமக்கல், ஏப்.9:நாமக்கல்லில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பாடாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும்.  சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில், அரசின் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதாக என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். 3 முறைகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருவதை கடைபிடிக்காத சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்றவைகள் தற்காலிகமாக மூடப்படும்.

மேலும் உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், கூரியர் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் போன்ற பொதுமக்களிடம் அதிக அளவு தொடர்பில் உள்ளவர்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திருமண மண்டபங்களில்  நடைபெறவுள்ள சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரத்தினை முன்னதாகவே, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு  கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>