கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

சேந்தமங்கலம், ஏப்.9: எருமப்பட்டி அடுத்துள்ள அலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(34). இவர் நாமக்கல்லில் இன்சூரன்ஸ் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் நாமக்கல்லில் இருந்து தனது டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தூசூர் அடுத்த பாலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு கலைநிகழ்ச்சியை மனோகரன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சபாபதி மகன் சக்தி பிரகாஷ்(21),  நிகழ்ச்சி மறைப்பதாக கூறி மனோகரனின் தலையை தட்டியுள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.இதில் ஆத்திரமடைந்த சக்திபிரகாஷ், தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக்கொண்டு மனோகரன் வீட்டுக்கு சென்று, அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனோகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு,  நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவுசெய்து சக்தி பிரகாசை, கடந்த வாரம் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த தூசூரை சேர்ந்த பார்த்தசாரதி (21) என்ற வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>