நூல் விலையேற்றத்தால் வேலை இழப்பு மனைவியுடன் பிளாட்பாரத்தில் குடியேறிய தறி தொழிலாளி

பள்ளிபாளையம், ஏப்.9: நூல் விலையேற்றத்தால் வேலை இழந்த விசைத்தறி தொழிலாளி, வாடகை செலுத்த வருமானமில்லாததால், மனைவியுடன் பிளாட்பாரத்தில் குடியேறிய அவலம் பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது. விசைத்தறி நெசவுக்கான நூல் விலை, கடந்த 6 மாதமாக கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உயர்ந்து வருகிறது. இதனால் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பல விசைத்தறி கூடங்கள் ஷிப்டு முறையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பெரியகாட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கருப்பண்ணன்(48), கடந்த 6 மாதங்களாக விசைத்தறி தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். வேலை இல்லாததால் அவரால் குடும்ப செலவை சமாளிக்கவே முடியவில்லை. மனைவி வாசுகி மனநிலை பாதிக்கப்பட்டதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் செலவும் கூடுதலாகியது. வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் அவதிப்பட்டார். இதனால் வீட்டின் உரிமையாளரால் அவர் வெளியேற்றப்பட்டார். வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியுடன், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை பிளாட்பாரத்தில் குடியேறியுள்ளார். வீதியில் வைத்து சமைப்பதும், சாக்கடையின் பிளாட்பாரத்தில் சாப்பிட்டு உறங்குவதும் வழக்கமாகி போனது. இவரது நிலையை கண்டு இரக்கப்பட்ட சிலர், அவரது சாப்பாட்டுக்காக சிறு தொகை கொடுத்து உதவி வருகின்றனர். சுயமாக சம்பாதித்து யாருடைய தயவும் இன்றி வாழ்ந்து பழக்கப்பட்ட கருப்பண்ணனை, இந்த நூல் விலையேற்றம் பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Related Stories:

>