கோடை துவங்கியதால் எலுமிச்சை விலை உயர்வு

தர்மபுரி, ஏப்.9: கோடை துவங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் எலுமிச்சை விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், வெயிலளவு, 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் நிழலை தேடி சென்று, தங்களை குளிர்வித்து வருகின்றனர். மேலும் பலர், இயற்கை பழரசங்களை பருகி தங்களை குளிர்வித்து வருகின்றனர். இந்நிலையில், கோடைக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில், ஒரு கிலோ எலுமிச்சை பழம் ₹80க்கு விற்பனையானது. தற்போது, கோடை துவங்கிய நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹80க்கு விற்ற பழம், நேற்று முன்தினம் ₹110, நேற்று ₹130க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: