ஆதிதிராவிடர் நல விடுதிகளில் போலி பில்போட்டு பல லட்சம் முறைகேடு

*  தலைமை செயலாளருக்கு ஆதாரத்துடன் புகார்

விழுப்புரம், ஏப். 9: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா காலகட்ட ஊரடங்குக்குபின் திறக்கப்பட்ட 3 மாதத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை விடுதிகளில் போலி பில் போட்டு, பல லட்சம் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக ஆதாரத்துடன், தமிழக அரசு தலைமை செயலாளருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. இத்துறை மூலம் நிதி ஒதுக்கி மாணவர்களின் அடிப்படை தேவைகள், கல்வி உரிமைகள் நிறைவேற்றுவது அரசின் கடமை. ஆனால், ஆதிதிராவிட நலத்துறையின் கீழ்செயல்படும் விடுதிகள் கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,143 பள்ளி விடுதிகள், 143 கல்லூரி விடுதிகள், 17 ஐடிஐ விடுதிகள், 5 பாலிடெக்னிக் விடுதிகள், 15 முதுகலை பட்டதாரி கல்லூரி விடுதிகள், ஒரு சட்ட கல்லூரி விடுதி என மொத்தம், 1,324 விடுதிகள் உள்ளன. இவற்றில், 98 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளை சேர்க்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொகுதி எம்.எல்.ஏ, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த இருவர், துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். இக்குழு பரிந்துரை செய்யும் நபர்களை தான், விடுதியில் சேர்க்க வேண்டும். ஆனால், பெரும்பாலான விடுதிகளில், மாணவர்கள் சேர்க்கப்படாமலே, அவர்கள் சேர்ந்ததாகவும், சில விடுதிகளில் சேர்ந்த மாணவர்கள், விடுதிக்கு வராத நிலையில், அவர்கள் வருவதாக கணக்கு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.

விடுதியில் தங்கிபடிக்கும் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ.900 உணவுக்காக செலவிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்ட ரூ.50, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 75 கட்டணமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாணவிகளுக்கு நாப்கின், சூடான உணவு தயாரிக்க கிங்பாயிலர், வாஷிங்மெஷின், பாய், பெட்ஷிட், கட்டில் போன்ற பல்வேறு வசதிகளையும் செய்து கொடுக்கிறது. குறைந்தபட்சம் ஒரு விடுதியில் 60 மாணவர்கள் இருப்பதாகவும் அதற்கு மாதத்துக்கு ரூ.58 ஆயிரம்வரை செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை, அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக விழுப்புரம் மாவட்டத்தில் புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களாக இந்த விடுதிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த 3 மாதங்களில் போலிபில் போட்டு பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, தலைமைச்செயலாளருக்கு ஆதாரத்துடன் சமூக ஆர்வலர்கள் புகார் அனுப்பியுள்ளனர். அதில், திண்டிவனம் தாலுகாவில் நடந்த சம்பவங்களை முன்வைத்த அனுப்பியுள்ளனர். அதில், திண்டிவனம் தாலுகாவில் மட்டும் 22 விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும், உணவுக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் என அனைத்தையும் அதிகாரிகள் மற்றும் அவரின்கீழ் செயல்படும் 2 ஊழியர்கள் போலி பில் தயாரித்து பலலட்சம் ஊழல் செய்துள்ளனர். ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கு பராமரிப்பு தொகையாக தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10,000 வங்கிக்கணக்கில் போடப்படும். அந்த நிதியையும் இவர்கள் முறைகேடு செய்துவிட்டனர். விடுதிகளுக்கு துடைப்பம், பெனாயில், சோப்ஆயில் போன்ற செலவினத்திற்கு ரூ.45 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததாக, வார்டன்களிடம் கையெழுத்துபெற்று, அந்தநிதியை அவர்களே முறைகேடு செய்துவிட்டனர்.

விடுதி வாடகை பணம் ரூ.35,585, பள்ளிபராமரிப்பு செலவினம் ரூ.1,60,000, விடுதி இதரசெலவினம் ரூ.45,000, தண்ணீர் கட்டணம் ரூ.9,000, விடுதி மாணவர்கள் சில்லரை செலவினம் ரூ.35,850 என மொத்தம் ரூ.2,85,435 பணத்தை மூன்று பேர் சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர். இந்த ஒரு தாலுகாவில் மட்டும் இவ்வளவு பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 7 தாலுகாவிலும் முறைகேடு பட்டியல் எடுத்தால் ஒரு கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம். இம்மாவட்டத்தில் 64 ஆதிதிராவிட நலப்பள்ளிகள், 70 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, விசாரணைக்கமிட்டி அமைத்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவ, மாணவிகளின் நலன்கருதி அரசு ஒதுக்கிய நிதியை இதுபோன்று அதிகாரிகள் முறைகேடு செய்வதை தடுக்க வேண்டுமென கூறியிருந்தனர்.

வாடகை கட்டிடத்தில் இயங்குவதை காரணம்காட்டி முறைகேடு

திண்டிவனம் தாலுகாவில் 22 ஆதிதிராவிடர் நலவிடுதிகள் செயல்படுகின்றன. தற்போது 3 ஆண்டுகளாக அனைத்து விடுதிகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு அதில் செயல்பட்டு வருகின்றன. அதற்கு முன்பு 3 விடுதிகள் மட்டும் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவந்தன. அதனை காரணம்காட்டி போலி பில் தயாரித்து, சிங்கனூர் ஆதிதிராவிடர் நலவிடுதி வாடகை கட்டிடத்தில் இயங்குவதாக ரூ.33,585 அரசு பணத்தை அதிகாரிகள் முறைகேடு செய்து விட்டதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories:

>