பாமக நிர்வாகியை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் தேர்தல் அன்று தாக்கப்பட்ட

ஆரணி, ஏப்.9: தேர்தல் அன்று தாக்கப்பட்ட பாமக நிர்வாகியை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதன்படி, ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணி அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாமக நிர்வாகி ராஜகோபால்(35), தொழிலாளி. இவர் கடந்த 6ம் தேதி தனது கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்துவிட்டு விட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ராஜகோபாலை வழிமறித்து அவதூறாக பேசி கைகளால் சரமாரியாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது,

            

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவரை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து மருத்துவரிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஆரணி அடுத்த தச்சூர் பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆரணி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியறையில் வைக்கப்பட்டுள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க படுவதை அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: