3 நாட்கள் விடுமுறைக்கு பின் ஒரே நாளில் ₹7.25 கோடிக்கு மது விற்பனை அதிகாரிகள் தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், ஏப். 9: ேவலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் 3 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் ஒரேநாளில் ₹7.25 கோடிக்கு மது விற்பனையானது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஒரு குடிமகனுக்கு 2 புல் பாட்டில்கள் விற்கலாம். அல்லது 6 ஆப் பாட்டில்கள் விற்கலாம். அல்லது 8 குவார்ட்டர் பாட்டில்களும், பீர் என்றால் 3 பீர் பாட்டில்களும் விற்கலாம். அதற்கு மேல் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த மதுபிரியர்கள் கடந்த 3ம் தேதி கும்பல் கும்பலாக வந்த வரிசையில் நின்று பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.இதனால் கடந்த 3ம் தேதி டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை களைக்கட்டியது. அன்றைய தினம் மட்டும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் உள்ளடங்கிய வேலூர் டாஸ்மாக் வட்டத்தில் 118 கடைகளிலும் ₹5 கோடியும், அரக்கோணம் டாஸ்மாக் வட்டத்தில் 88 கடைகளில் ₹3 கோடியே 80 லட்சம் என மொத்தம் ₹8.80 கோடிக்கு மது விற்பனையானது.

இந்நிலையில், 3 நாட்களுக்கு விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். நேற்று முன்தினம் மட்டும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 118 டாஸ்மாக் கடைகளிலும் ₹4.75 கோடியும், அரக்கோணம் டாஸ்மாக் வட்டத்தில் 2.50 கோடி என மொத்தம் ₹7.25 கோடிக்கு மது விற்பனையானது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சாரசரி விற்பனை விட, 3 நாட்கள் விடுமுறை பிறகு நேற்று முன்தினம் சாரசரி அளவை விட கூடுதலாக மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: