பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் வாபஸ் வரும் 4ம் தேதி வரை மற்ற விதிமுறைகள் தொடரும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால்

வேலூர், ஏப்.8: வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால் பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் மற்ற தேர்தல் விதிமுறைகள் வரும் மே 4ம் தேதி வரையில் தொடரும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தலையொட்டி பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க 234 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதில் ₹50 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், ₹10 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதற்கும் ரசீது காண்பிக்க வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் நியமிக்கப்பட்ட பறக்கும்படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் வாபஸ் பெறப்பட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்றி வந்த 45 பறக்கும் படையினரும், 45 நிலை கண்காணிப்பு குழுவினரும் வாபஸ் பெறப்பட்டனர். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் வாபஸ் பெறப்பட்டாலும் மற்ற தேர்தல் நடைமுறைகள் வரும் மே 4ம் தேதி வரை தொடரும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்தல் கெடுபிடிகளால், வியாபாரிகள், விவசாயிகள் பணத்தை கொண்டு சென்று தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் தற்போது, தேர்தல் சோதனை முடிவுக்கு வந்துள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: