குருமலையில் 90.52 சதவீதம் வாக்குப்பதிவு மலைக்கிராமங்களில் மக்கள் ஆர்வம்

அணைக்கட்டு, ஏப்.8: மலைக்கிராமங்களில் புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதால், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் குருமலையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் 90.52 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குபட்ட குருமலை, அல்லேரி மலையில் முதல் முறையாக புதிதாக வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் நாளான நேற்று முன்தினம் காலை முதலே வரிசையில் காத்திருந்த மக்கள் காலை 7மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை ஆர்வமுடன் வாக்களித்தனர். இறுதியாக வாக்குப்பதிவு முடிந்தபின் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி புதிதாக குருமலையில் அமைக்கப்பட்ட பூத்தில் 90.52 சதவீதம் வாக்கு பதிவு நடந்திருப்பதாகவும், இது கடந்த முறை நடந்த தேர்தலை விட 10 சதவீதம் அதிகம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் அல்லேரி மலையில் 79 சதவீதமும், பீஞ்சமந்தை, தொங்குமலை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட 10 வாக்கு சாடிகளிலும் 80 சதவீதத்திற்கு மேல் அதிகளவில் இந்த முறை வாக்கு பதிவு நடந்திருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக தொடங்கிய பூத்களில் இரவு 8.30 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கபட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.இதுபோன்ற மலைகிராமம் உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவில் வாக்கு பதிவு நடந்ததன் காரணமாக வேலூர் மாவட்டத்திலே அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அதிகளவில் 77.05 சதவீதம் வாக்குப்பதிவு நடத்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: