பேராசிரியை கத்தியால் குத்தி நகை பறித்தவருக்கு 10 ஆண்டு சிறை வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து

வேலூர், ஏப்.8:வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பேராசிரியையை கத்தியால் குத்தி நகை பறித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள நரசிங்காபுரத்தைச் சேர்ந்த குணசேகரனின் மனைவி புவனேஸ்வரி(48), கல்லூரி உதவி பேராசிரியை. இவரது வீட்டில் ஒரு பகுதி வாடகைக்கு உள்ளது என்று போர்டு வைத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம், உதவி பேராசிரியை புவனேஸ்வரி வீட்டிற்கு, கீழ்விஷாரத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரியும் நாகூர்மீரான்(36) சென்றுள்ளார். அவர் வீடு வாடகைக்கு உள்ளதா? எவ்வளவு வாடகை என்று கேட்பது போல் நடித்து, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.

இதனால் பதறிப்போன புவனேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகூர்மீரான், புவனேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கீழ்விஷாரத்தைச் சேர்ந்த நாகூர்மீரானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமிபிரியா ஆஜரானார். இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நாகூர் மீரானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார்.

Related Stories: