வாக்குப்பதிவான இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு பாதுகாப்பு கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.8: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதையொட்டி, கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்ெபன்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

அதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள் (விவிபேட்) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய ஆவணங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் விடிய விடிய கொண்டுவரப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் சேர்க்கப்பட்டன.

அதன்படி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், நான்கு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில், ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட நான்கு தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறையில் வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்டார்ங் ரூம்) காற்றுப்புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு அறைகளில் மின் கசிவு விபத்தை தவிர்க்க மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் மற்ற பகுதிகளில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதனை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேட்பாளர்களின் முகவர்கள் தங்கியிருந்து கண்காணிக்க வசதி செய்துள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆகியோர் நேரடி ஆய்வு செய்து, பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்தினர்.

அதோடு, அதிகாரிகள் உள்ளிட்ட யாரையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறை அருகே அனுமதிக்ககூடாது, வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட வரும் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரங்கள் முழுவதும் முறையாக பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரத்துக்காக, ராட்சத ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடர விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: