மஞ்சள் விளைச்சல் அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி குறைந்த வட்டி கடன் வழங்க கோரிக்கை கண்ணமங்கலம் அருகே

கண்ணமங்கலம், ஏப்.8: கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இந்த வருடம் மஞ்சள் விளைச்சல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கண்ணமங்கலம், அம்மாபாளையம், படவேடு, அரசம்பட்டு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான நிலங்களில் வருடந்தோறும் மஞ்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மஞ்சள்களை விவசாயிகள் சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் வசதிக்காக அம்மாபாளையம் ஏரிக்கரை அருகே மஞ்சள் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது. ஆனால், இந்த கிடங்கு குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், சரிவர செயல்படாததாலும், இப்போதும் மஞ்சள் விற்பனைக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலையே உள்ளதாகவும், இதனால் வாகன போக்குவரத்து செலவும், நேரமும் விரயமாவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

குறிப்பாக மஞ்சள் கிடங்கில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்படும் பொருளீட்டு கடன் கடன் இங்கு கடந்த 3 வருடங்களாக வழங்கப்படவில்லையாம். இதனால் இங்குள்ள விவசாயிகள் வேலூர் மண்டிக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயிகள் வெளிமாவட்டங்களுக்கு வியாபாரிகளை தேடி செல்லாமல், வியாபாரிகள் விவசாயிகளை தேடி வந்து மஞ்சளை கொள்முதல் செய்யவும், அம்மாபாளையம் மஞ்சள் கிடங்கை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கவும் வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வருடம் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் நீர் நிலைகள் நிறைந்திருந்ததால் மஞ்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், மஞ்சள் நாம் தினசரி உணவில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கும், கோயில்களிலும் மங்கள பொருளாக விளங்குகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க எதிர்ப்பு சக்தியாக மஞ்சள் இருப்பதால், மஞ்சளின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

Related Stories: