வெங்கடாம்பேட்டை கோயில் குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நெய்வேலி, மார்ச் 5: குறிஞ்சிப்பாடி அடுத்த கோயில் குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வேணுகோபால சுவாமி கோயில் தீர்த்த குளம் அமைந்துள்ளது. இங்கு இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குளிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று வெங்கடாம்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த சிங்காரவேல் மகன் ராம்குமார் (14), அதே தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் புஷ்பராஜ் (15) ஆகிய இருவரும் தங்களது சக நண்பர்களோடு விளையாடிவிட்டு தீர்த்த குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அதன்படி ராம்குமார், புஷ்பராஜ் ஆகிய இருவரும் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்கள் நீரில் மூழ்கியதை பார்த்த சக நண்பர்கள் ஓடிச் சென்று அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறியுள்ளனர். பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருவதற்குள் 2 சிறுவர்களும் நீரில் முழுமையாக மூழ்கி விட்டனர். இதையடுத்து பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பொதுமக்களின் உதவியோடு இரு சிறுவர்களையும் மீட்டனர். அதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டான். உயிருக்கு போராடிய புஷ்பராஜை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.  இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் வெங்கடாம்பேட்டை கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: