ஆவின்பால் கலப்பட வழக்கில் சிக்கியவர் போட்டியிட விருப்பமனு டிடிவி கட்சியில் மனு தாக்கல் செய்தார்

விழுப்புரம், மார்ச் 5: தமிழக சட்டமன்ற தேர்தலில் மும்முனை அல்லது 4 முனைப் போட்டிகள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக இருமுனை போட்டியிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம், சமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டது. இதனிடையே, 234 தொகுதிகளிலும் அமமுக தனித்து போட்டியிடும் என்றும், இதற்காக கட்சியில் விருப்பமனு அளிக்கலாம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி, 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர். இதனிடையே, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்ற ஆவின் வைத்தியநாதன் மனுதாக்கல் செய்துள்ளனர். சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன் கடந்த 2014ம் ஆண்டு, சென்னைக்கு கொண்டு செல்லப்படும் ஆவின்பாலை திருடி, திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில் தண்ணீரை கலப்படம் செய்து ரூ.23 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், கலப்படம் செய்ததாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட 24 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அமமுகவில் ஐக்கியமான இவர், சென்னை மாவட்ட துணை செயலாளர் பதவியில் அக்கட்சியில் இருந்து வருகிறார். இவர், விழுப்புரம் பகுதியில் பிரபலமானவர் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அதேசமயம், மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் உள்ளிட்டவர்களும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>