பெண்களுக்கு பணம் வினியோகம் அமைச்சர் சண்முகம், அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு

விழுப்புரம், ஏப். 3: பெண்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சிவி சண்முகம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த தொகுதியில் பண பலத்தை நம்பியே களம் இறங்கியுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிபெற ரூ.200 கோடி இறக்கியுள்ளதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடி வி தினகரன் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் சண்முகம் பிரசாரத்தின்போது, பெண்களுக்கு பணம் வழங்கிய வீடியோ வைரலான விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார். வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சந்துரு, பணம் கொடுத்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதிமுக நிர்வாகி கிருஷ்ணன், வேட்பாளரான அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் பெயர் தெரியாத மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் மகளிருக்கு அமைச்சர் சிவி சண்முகம் பணம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: