ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் பிரதமர் மோடி வரும் விமானத்தை தேர்தல் ஆணையம் சோதனை நடத்துமா? வடலூர் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்

விருத்தாசலம், ஏப். 3:  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை வடலூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களான குறிஞ்சிப்பாடி எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ(திமுக), புவனகிரி- துரை கி. சரவணன்(திமுக), கடலூர் ஐயப்பன்(திமுக), காட்டுமன்னார்கோவில் சிந்தனை செல்வன்(விசிக), சிதம்பரம் அப்துல்ரகுமான்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சிகளை சேர்ந்த செயல் வீரர்களே, வாக்காள பெருமக்களே வணக்கம். உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். உங்களையெல்லாம் சந்தித்து ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஏற்கனவே பலமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலே மக்களின் குறைகளை எடுத்து வைத்தவர். தற்போது கொரோனா  என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இருப்பினும் இந்த கூட்டத்திற்கு நானும் வருவேன் என கூறினார். நான் உங்களுடைய உடலை கவனியுங்கள் என ஒரு கட்சித்தலைவராக கட்டளை இட்ட காரணத்தினால் இந்த கூட்டத்துக்கு வராமல் உள்ளார். அதுபோல் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கி.சரவணன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர். கடலூர் தொகுதியில் போட்டியிடும் ஐயப்பன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினராக உள்ள அப்துல் ரகுமான் அவருக்கு ஏணி சின்னத்திலும்,  காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு பானை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் தமிழர்களுக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மாநில திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாய தொழில் வளர்ச்சி உரிமை சட்டம் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கக்கூடிய மூன்று லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். முதல் பட்டதாரிகளுக்கு அரசு உரிமையில் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

 அதுபோல் சாலைப் பணியாளர்கள் 75 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கோயில் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்பு பணிக்கு 25 ஆயிரம் திருக்கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 25 ஆயிரம் பேர் மக்கள் நல பணியாளர்கள். இதில் பெண்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். முதல் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும். இளைஞர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும். இதனால் ஒரு லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். அதனால் வேலை இல்லா திண்டாட்டம் நமது ஆட்சியில் இருக்காது.  அதாவது ஆண்டவன் சொல்கிறான் அருணாச்சலம் செய்கிறான் என சொல்வார்கள் அது போல் இந்த ஸ்டாலின் சொல்கிறான் அவர்கள் செய்கிறார்கள். ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவி திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மகளிருக்கான செலவை குறைக்க டவுன் பேருந்தில் இலவச பேருந்து பயணம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் கொண்டு வந்தோம். ஆனால் தற்போது 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, விலைவாசியை குறைக்க பெட்ரோல் ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும்.

 அதுபோல் மாதமிருமுறை மின் கட்டணம் செலுத்தக்கூடிய முறை அமல்படுத்தப்படும். தொழில்துறை மீட்டெடுக்க 75 சதவிகிதம் தமிழர்களுக்கு வழங்கப்படும். அனைத்து திட்டங்களையும் அறிவித்த நான் கடலூர் மாவட்டத்திற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளேன் என்று கேட் கிறீர்களா இதோ.. வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம், கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். புவனகிரி நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும். கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். சிதம்பரம் மங்களூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், கச்சேரி சாலையில் நவீன நூலகம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் பிடி துறைமுகம், கடலூரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை, கடலூரில் அரசு பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காய்கறி பூங்கா மீன்வளக் கல்லூரி அமைக்கப்படும். அரசு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு அமைக்கப்படும்.

குறிஞ்சிப்பாடியில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். எனது மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  நாளை என் வீட்டிலும் சோதனை நடத்துவார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட  மாட்டோம். தேர்தல் நேரத்தில் அதுவும் தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில்  இந்த சோதனை நடத்துவது என்ன நியாயம்? அப்படி என்றால் நான் ஒன்று  கேட்கிறேன். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அவர் வரும்  விமானத்தில் பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தேர்தலுக்காக  கொடுக்கிறார் என கூறுகிறேன். அவர் வரும் விமானத்தை  சோதனை நடத்த இந்த  அதிகாரிகளுக்கு தைரியம் இருக்கிறதா? அவருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா? வாக்கு சேகரிக்க வந்த நான் எனக்கும் வாக்கு சேகரிக்கிறேன். முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூரில் ஐயப்பன், புவனகிரியில் சரவணன், சிதம்பரத்தில் அப்துல் ரகுமானுக்கு ஏணி சின்னத்திலும், காட்டுமன்னார்கோவிலில் சிந்தனை செல்வனுக்கு பானை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு அவர்களை வெற்றி பெறச் செய்தால் தான் நான் முதல்வராகுவேன் என்றார்.

பொய் மூட்டைகளை பிரதமர் மோடி அவிழ்த்து விடுகிறார் தொலைக்காட்சிகள்  மற்றும் பத்திரிக்கைகளில் எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று வரும்  செய்திகளை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறைய பொய் மூட்டைகளை  பிரதமர் மோடி அவிழ்த்து விடுகிறார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போது  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 2015ம் ஆண்டு  தொடங்குவதாக அறிவித்து அடிக்கல் நாட்டினார்கள். அதனால்தான் அப்போது அடிக்கல் நாட்டிய  செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் அனைவரிடமும் எடுத்துக் காட்டி வருகிறார். இது போன்று 15  மாநிலங்களில் அறிவித்து இதுவரை பணி தொடங்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

Related Stories:

>