திமுக தலைவர் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் திருமாவளவன் பேட்டி

உளுந்தூர்பேட்டை, ஏப். 3: திமுக தலைவர் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு நேற்று மாலை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணிக்கண்ணன் மற்றும் விசிக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி  பணிகளை முடுக்கிவிட்டார். பின்னர் திருமாவளவன் கூறுகையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் வருமானவரித்துறையினர் திமுக தலைவரின் மருமகன் இல்லம் மற்றும் திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கை திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை அச்சுறுத்தும் போக்காகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முன்னணி பிரமுகர்களை தீவிரமாக செயல்படாமல் முடக்குவதற்கான முயற்சியாகும். இந்த நெருக்கடிகளால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்துவிட முடியாது. தமிழகம் முழுவதும் திமுகவுக்கான அலை வீசுகிறது. வடமாவட்டங்களில் அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்.

அதற்காக விடுதலை சிறுத்தைகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறோம். மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். எனவே திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். நரேந்திர மோடி, திமுகவை கடுமையாக விமர்ச்சித்து உள்ளார். திமுக அதற்கு இடம் கொடுக்காமல் வலிமையாக எதிர்க்கிறது. இந்த காழ்புணர்ச்சியால் திமுக மற்றும் கூட்டணியின் மீது அவதூறுகளை பரப்புகின்றனர். இதனை திமுக கூட்டணி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. வாக்காளர்கள், உரிய பாடம் புகட்டுவார்கள், என்றார்.

Related Stories:

>