புதுவை மக்கள் காங்., கூட்டணி வெற்றிக்கு துணை நிற்பார்கள் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை

புதுச்சேரி, ஏப். 2: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுவை மக்கள் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், வருகிற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு நிச்சயம் துணை நிற்பார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஏழை மக்களின் நலனுக்காகவும், சாதி, மதபேதமின்றி மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு மக்களிடம் சாதி, மதப்பிரிவினையை ஏற்படுத்துகிறது. தனி நபர் சுதந்திரத்தை பறிக்கிறது. ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார். புதுவையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்எல்ஏக்களை இழுத்து, தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ்

ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது. இதேபோல், கர்நாடகா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை திணித்துள்ளது. எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்ற வகையில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை. விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றியுள்ளதோடு, பெட்ரோல், டீசல், கேஸ் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதனால் மக்கள் தவிக்கின்றனர். பெட்ரோலிய பொருள் மூலம் ரூ.22 லட்சம் கோடி அளவில் வரி வசூலித்துள்ள மத்திய அரசு, அத்தொகையை என்ன செய்துள்ளது. மத்திய பாஜக அரசு தொடர்ந்தால், ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் அழித்து விடுவார்கள். பாஜகவினர் விஷம் போன்றவர்கள், அவர்களை புதுச்சேரி மக்கள் அனுமதிக்கக் கூடாது. புதுச்சேரியின் தனித்தன்மையை காப்பதற்கும், மக்கள் சுந்திரமாக செயல்படவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். டெல்லியில் துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் என புதிதாக சட்டம் இயற்றியுள்ளனர். இதனால் மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அதிகாரமில்லை. புதுவையிலும் இச்சட்டம் பாஜகவால் விரைவில் இயற்றப்பட்டு, ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: