புதுவை தேஜ கூட்டணியில் உரசல் பாஜக, அதிமுக தொகுதிகளில் பிரசாரத்தை புறக்கணிக்கும் ரங்கசாமி

புதுச்சேரி,  ஏப். 2:  புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை பாஜக தேசிய தலைமை  அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் விரக்தியடைந்த ரங்கசாமி பாஜக, அதிமுக  போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரத்தை அடியோடு புறக்கணித்து விட்டார்.  தேர்தல் நாள் நெருங்கிவிட்ட நிலையில் இது தேஜ கூட்டணிக்கு புதிய சிக்கலை  ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்,  பாஜக, அதிமுக இணைந்து போட்டியிடுகிறது. இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக  ரங்கசாமியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பாஜக தயக்கம் காட்டி வருகிறது. தேஜ  கூட்டணியின் மாநில தலைவர் என்பதை மட்டும் பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது. முதல்வர் யார்? என்பதை தேர்தல் முடிவுகளுக்குபின் தேஜ அணியின்  எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி அறிவிப்பர் என்று பாஜக தெரிவித்து வருகிறது.  இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரிக்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி  அறிவிப்பார் என ரங்கசாமி எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே  மிஞ்சியது.

 மாறாக என்ஆர் காங்கிரஸ் தொழிலதிபர் புவனேஸ்வரன் உள்ளிட்ட  ரங்கசாமிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் வருமான  வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல்  செய்தது. இது ரங்கசாமிக்கு பாஜக மீது கோபத்தை அதிகப்படுத்தி இருப்பதாக  என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு பிறகும்  தாங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்காமல்  ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதற்கான முன் எச்சரிக்கையாகத்தான் பாஜக  திரைமறையில் வருமான வரித்துறை போர்வையில் ஒரு மிரட்டலை முன்னெடுத்துள்ளதாக  அரசியல் நிபுணர்களும் கருதுகின்றனர். இதனிடையே நேற்று புதுச்சேரி வருகை  புரியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக வேட்பாளர்கள்  போட்டியிடும் லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே  பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும் இப்பிரச்னை தொடர்பாக அவர்  வாய்திறக்கவில்லை.

இதுபோன்ற செயல்பாடுகளால் அதிருப்தியின் உச்சத்திற்கு  சென்ற தேஜ அணியின் தலைவரான ரங்கசாமி, பாஜக வேட்பாளர் போட்டியிடும்  தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த முடிவை அடியோடு ரத்து செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கட்சி போட்டியிடும் நெட்டப்பாக்கம், ஏம்பலம்  தொகுதிகளில்கூட அவர் பிரசாரத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்.  ஆனால் மாலையில் நகர பகுதியான ராஜ்பவன் தொகுதியில் கட்சியின் தேர்தல்  அறிக்கையை பிரசார வேனிலேயே வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இதேபோல் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கும் ரங்கசாமி இதுவரை  பிரசாரத்துக்கு போகவில்லை.

இதனால் புதுச்சேரி மாநில தேஜ கூட்டணியில்  உரசல் ஏற்பட்டு குழப்பமான சூழல் நீடிக்கிறது. இதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால் அதிமுக, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏனென்றால் மதச்சார்பற்ற அணியான காங்கிரஸ்- திமுக  கூட்டணியை வீழ்த்த ரங்கசாமியின் ஆதரவு வாக்கு வங்கி இவர்களுக்கு தேவை என்பதால், தங்களது கட்சி தலைமையிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து  அந்தந்த கட்சி தலைமையானது தங்களது வேட்பாளர் நிற்கும் தொகுதிகளில் மட்டும்  களப்பணியை தீவிரப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. முக்கிய தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களை வரவழைத்து பிரசாரம் மேற்கொண்டுள்ளது.  தேர்தல் நாளுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் காரைக்காலில் தனது  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள ரங்கசாமி முடிவு செய்துள்ளார். 4ம்தேதி இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: