புதுச்சேரியில் பரபரப்பு அமித்ஷா பேரணியில் சிலாப் உடைந்து 4 பேர் படுகாயம் திடீர் கூட்ட நெரிசலால் விபரீதம்

புதுச்சேரி, ஏப். 2:  புதுச்சேரியில் நேற்று நடந்த அமித்ஷா பேரணியில் சிலாப் உடைந்து 4 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், அர்ஜூன் ராம் மேக்வால், கிரிராஜ் சிங் மற்றும் எம்பிக்கள், மேலிட பார்வையாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி 30ம் தேதி புதுவையில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா காலை 10 மணிக்கு புதுச்சேரி வந்தார். சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைந்த அவரை பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலுக்கு சென்ற அமித்ஷா அங்கு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு பாஜக வேட்பாளர்களான சாமிநாதன் (லாஸ்பேட்டை), கல்யாணசுந்தரம் (காலாப்பட்டு), ஜான்குமார் (காமராஜர் நகர்) ஆகியோருக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாகன பேரணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நெல்லித்தோப்பு வேட்பாளர் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், மணவெளி வேட்பாளர் ஏம்பலம் செல்வம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு விமான நிலையம் திரும்பிய அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருக்கோவிலூர் சென்றார். முன்னதாக லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே உள்ள நேதாஜி சுபாஷ் சிலைக்கு மாலை அணிவித்து திறந்த ஜீப்பில் ஏறினார். அவரது பிரசார வாகனத்தை சூழ்ந்தபடி தொண்டர்கள் நின்றனர். இதனால் அவரது பிரசார வாகனம் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமித்ஷா அங்கிருந்த மீடியா வாகனம் உள்ளிட்ட 2 வாகனங்களை முன்னே செல்லுமாறு இந்தியில் மைக்கில் சொன்னார். தொண்டர்களுக்கு இந்தி புரியாததால் குழப்பம் ஏற்பட்டது. அருகில் இருந்த பாஜக தலைவர் சாமிநாதன் மீடியா வாகனம் உள்ளிட்ட வாகனத்தை முன்னே செல்லுமாறு தமிழில் கூறினார். அந்த வாகனங்கள் முன்னேறியதால், தொண்டர்கள், நிர்வாகிகள் சாலையின் இருபுறமும் ஒதுங்கினர்.

அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக தொண்டர்கள் சாக்கடை கால்வாய் மீது மொத்தமாக ஏறி நின்றனர். இதனால் சிமெண்ட் சிலாப் பாரம் தாங்காமல் திடீரென உடைந்தது. பாலத்தின் மீது நின்றிருந்த 3 பெண்கள், 70 வயது முதியவர் கால்வாய்க்குள் விழுந்தனர். இதில் ஒரு பெண்ணுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. முதியவர் கால் உடைந்தது. பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட ஆட்டோவை வரவழைத்து படுகாயம் அடைந்தவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர்.

இதற்கிடையில் பேரணி முடிவில் சிவாஜி சிலை அருகே அமித்ஷா உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருக்கோவிலூர், தாராபுரம் மற்றும் கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருந்ததால் நேரமின்மை காரணமாக உரையாற்ற முடியவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி இசிஆர் சாலை, லாஸ்பேட்டை பகுதிகளில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு இருந்தது. வரும் 4ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்கால் திருநள்ளாறில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். குதிரை மறுத்ததால் பரபரப்பு அமித்ஷா வருகையையொட்டி பாஜக தரப்பில்  பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குதிரை, பசுமாட்டை வரவழைத்து  நிறுத்தியிருந்தனர். அதனை பிரசார வாகனத்தின் முன்பு கொண்டு செல்ல  அழைத்தபோது, குதிரை வர மறுத்தது. கூட்டத்தை பார்த்து மிரண்டதால் வரவில்லை.

அமித்ஷா சந்திப்பை புறக்கணித்த ரங்கசாமி ுதுச்சேரிக்கு அமித்ஷா வருகையையொட்டி

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால்  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கலந்து  கொள்ளவில்லை. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் கொடிகள் பேரணியில் பறக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி பிரசாரத்தில் கலந்து கொண்ட அவர், முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிப்பார்கள் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் மோடி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகரித்து வருவதால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: