தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் ெகாள்ளக் கூடாது எஸ்எம்எஸ் மூலம் பாஜ பிரசாரம் கடுமையான குற்றச்சாட்டு n தனி மனிதர்களின் தகவல்களை ஆதார் ஆணையம் பாதுகாக்க வேண்டும்

புதுச்சேரி, ஏப். 2:  புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தனி நபர்களின் தகவல்களை பெற்று வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்தது கடுமையான குற்றச்சாட்டாகும். இதன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜ சார்பில் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குரூப்கள் ஆரம்பித்து, அதன் வழியாக தேர்தல் பிரசாரம் செய்து வருவது குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுவை தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு ஒட்டுமொத்த எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய பாஜவினர் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பாஜவிற்கு மார்ச் 7ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், புதுவை வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என்றும் ஆதார் தகவல்கள் கசியவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்தார்.தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பாஜ அளித்த விளக்கம் நிராகரிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது என்றார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்களின் மொபைல் எண்கள் பெறப்பட்டு, ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் பாஜவினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள் என்றார்.அப்போது, பாஜ சார்பில் ஆஜரான வக்கீல், நாங்கள் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்தோம் என்றார். அதற்கு தலைமை நீதிபதி, வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்காமல் இதுபோன்ற மக்களின் தனிப்பட்ட விவரங்களை எப்படி சேகரிக்கலாம். இதை ஏற்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய நெட்வொர்க்குகள் மூலம் எஸ்.எம்.எஸ்.

மூலம் வாக்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மார்ச் 29 வரை எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்த பாஜவின் நடவடிக்கை தீவிரமான தனிமனித உரிமை மீறல். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து ஆதார் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். மனுதாரரின் இந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் அனுமதி இல்லாமல் பெற்றிருப்பது கடுமையான குற்றச்சாட்டாகும். இதை தேர்தல் ஆணையம் சாதாரணமாக எடுத்துவிடக்கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடக்கூடாது. ஆதார் தகவல்கள் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள். அவற்றை ஆதார் ஆணையம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆதார் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். இந்த விஷயத்தில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் எப்படி கசிந்தது என்பது குறித்து ஆதார் ஆணையம், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>