புதுவையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி ரியல் எஸ்டேட் அதிபர்கள் வெளிமாநில வாகனங்கள் கண்காணிப்பு கலக்கம்

புதுச்சேரி, ஏப். 1: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனிடையே புதுச்சேரிக்குள் உலாவும் வெளிமாநில வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பல அரசியல் பிரமுகர்களும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். இவர்கள் ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த கணக்கில் காட்டப்படாத பணம், தேர்தலுக்காக செலவு செய்யப்படுவதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் லாஸ்பேட்டையில் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் புவனேஸ்வரன் உள்ளிட்ட 8 ரியல் எஸ்டேட் அதிபர் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

10 மணி நேரமாக நடைபெற்ற இந்த வருமான வரித்துறையின் சோதனை நிறைவுற்ற நிலையில் அங்கிருந்து கணக்கில் வராத பணத்திற்கான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன்மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதோடு தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் உள்ள பிரபல அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகளை மாநில தேர்தல் துறையின் உதவியுடன் ரகசியமாக வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனிடையே வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் புதுச்சேரிக்குள் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட சில தொகுதிக்குள் அடிக்கடி உலா வருவதாகவும், இவற்றை கண்காணிக்க வேண்டுமெனவும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின. அதன்பேரில் வெளிமாநில வாகனங்களையும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

Related Stories:

>