அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட தடை தேர்தல் அலுவலரிடம் தவாக புகார்

பண்ருட்டி, ஏப். 1: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த், வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், கோபிநாத் ஆகியோர் நேற்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்கலநாதனிடம் மனு ஒன்றை வழங்கினர். அதில் கூறியதாவது,  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். இந்தச்சூழ்நிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரமானது கடந்த 30.03.2021 மாலை 4 மணி வரை எவ்வித பிரச்னையுமின்றி அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்து வந்தோம். இந்த நேரத்தில் 30.03.2021 மாலை 6 மணி அளவில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எங்கள் கட்சியின் வேட்பாளர் வேல்முருகனை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பண்ருட்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி எங்கள் தலைவர் மீது தனி மனித தாக்குதல் செய்துள்ளார்.

இது சட்டத்திற்கும் தேர்தல் ஆணைய உத்தரவிற்கும் எதிரானதும், இந்த பேச்சு அவரும் அவருடைய தந்தையும் (ராமதாஸ்) அவரது கட்சி மாநில நிர்வாகிகளும் சேர்ந்து தயாரித்து அதனை எழுதி எடுத்து வந்து பேசியுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த அதிமுக வேட்பாளர் ராசேந்திரன், அவரது முன்னணி கட்சியினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்திடவும், மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் இடங்களில் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை ஆபாசமாக பேசி பிரசாரம் செய்வதோடு மட்டுமின்றி திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் மாநில நிர்வாகிகள் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை தரக்குறைவாக பேசிவருவதால் அவர்கள் அனைவரையும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories:

>