×

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும்: போக்குவரத்து ஏஐடியுசி கலெக்டரிடம் வலியுறுத்தல்

 

தஞ்சாவூர், ஜூலை 30: மினி பேருந்துகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என போக்குவரத்து ஏஐடியூசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பில் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது; தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையமாக மாற்றப்பட்ட போது எதிரே திருவையாறு பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த பாபநாசம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருக்கருகாவூர், அரியலூர் வழித்தட பேருந்துகளும் தற்போது ஒரே இடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 80 நகரப் பேருந்துகளும், 25 அரியலூர் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுவதால் இட நெருக்கடி அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த சுமார் பத்து மினி பேருந்துகளுடன் தற்போது தாராள அனுமதி காரணமாக 70க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்தில் இயக்கப்படுகிறது. இதனால் இட நெருக்கடியும், பயணிகளை ஏற்றி, இறக்குவதில் போட்டியும் அதிகமாகி உள்ளது. மினி பேருந்துகள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் உரிய நேரத்தில் இயக்கப் படுவதில்லை. கிராமங்களுக்கு செல்வதில்லை. அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம், மருத்துவ கல்லூரி மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து கழக நகர பேருந்துகளின் வருவாய் பெரும் அளவில் குறைந்து விட்டது.

அரசு பேருந்து நேரத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு தொழில் அமைதியும் கெட்டுப் போய் உள்ளது. இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை மினி பேருந்துகள் இயக்கும் நிலையமாக ஒதுக்கி தர மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாநகர ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கடந்த ஜூன் மாதம் கோரிக்கை மனு கொடுத்து பேசி வந்தனர் ஆனால் மினி பேருந்துகளுக்கு ஒதுக்கப்படும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் பத்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் விசாரித்தால் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அண்டர் கிரவுண்ட் கட்டப்பட்டு, மேலே வணிக வளாகத்துடன் பேருந்துகள் செல்வதற்கு வழி விடுவதற்கு வேலை செய்து வருகிறோம் என சொல்லுகின்றனர்.

ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும்போது இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவது என்பது தேவையில்லாதது. உடனடியாக இந்த பணி நிறுத்தப்பட்டு மக்கள் வரிப்பணம் வீணாக்காமல் மினி பேருந்துகளுக்கு ஒதுக்கி தீர்வு காண மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Thanjavur ,Transport AITUC ,AITUC ,Tamil Nadu State Transport Corporation ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...