×

15 ஆண்டுகளாக மூடி கிடக்கும் உழவர்சந்தை

 

கிருஷ்ணகிரி, ஜூலை 30: காவேரிப்பட்டணத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழவர் சந்தை, 15 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதனை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் 2 இடங்கள் என நான்கு இடங்களில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. காவேரிப்பட்டணத்தில், பாலக்கோடு சாலையில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி, உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் உழவர் சந்தை மூடப்பட்டது. இதனை திறக்கக் கோரி பல்வேறு தரப்பினர் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு மேற்ெகாண்ட அப்போதைய மாவட்ட கலெக்டர் சரயு, உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28ம் தேதி, காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் கூட செயல்படாமல் மீண்டும் உழவர் சந்தை மூடப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `காவேரிப்பட்டணத்தில், உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால், சாலையோர காய்கறி கடை வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். இடைத்தரகர்களின் ஆதரவோடு, அதே பகுதியில் சாலையோரங்களில் காய்கறி வியாபாரம் செய்யும் நிலை தொடர்கிறது. உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை, குறைந்த லாபத்தில் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட உழவர்சந்தையை செயல்பட விடாமல், சிலர் இடையூறாக உள்ளனர்.

இடைத்தரகர்களை வைத்து, அவர்களிடமே காய்கறிகளை விற்பனை செய்யும்படி, உழவர் சந்தை விவசாயிகளை மிரட்டுகின்றனர். வேறு வழியின்றி நாங்களும் கிடைக்கும் விலைக்கு அவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறோம்,’ என்றனர். இது குறித்து வேளாண் துறை வணிகம் மற்றும் விற்பனை பிரிவு அலுவலர்கள் கூறுகையில், `காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை செயல்பட வைக்க நாங்கள் முயன்றோம். அங்கு என்ன பிரச்னை என்பதை யாரும் தெளிவாக கூறவில்லை. விவசாயிகளை நாங்களே அழைத்து வந்து, உழவர் சந்தையில் அமர வைத்து நடத்தினோம். இருப்பினும் அது தொடரவில்லை. அதனால் உழவர் சந்தையை மீண்டும் திறக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டோம். வேறு திட்டப்பணிகளுக்கு உழவர் சந்தை அமைந்துள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, சுமார் 15 ஆண்டுகள் ஆகியும் உழவர்சந்தை செயல்படவில்லை. ஆனால் உழவர் சந்தையிலிருந்து 20 அடி தூரத்தில் சாலையோர காய்கறி கடைகள் நடத்தப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, உழவர் சந்தை மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Krishnagiri ,Cauverypatnam ,Krishnagiri district ,Thenkani Kottai ,
× RELATED டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி