புழல், ஜூலை 30: செங்குன்றம் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றும் தவெக அரசுக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. செங்குன்றம், நாரவாரிகுப்பம் தேர்வுநிலை பேரூராட்சி மாதாந்திர கூட்டம், கலைஞர் கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை தலைவர் விப்ர நாராயணன், நிர்வாக செயல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அடிப்படை பிரச்னைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்டவை குறித்து உடனடியாக நிவர்த்தி செய்வது வரவு, செலவு மற்றும் பேரூராட்சியில் நடைபெற உள்ள பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், 14வது வார்டு திமுக கவுன்சிலர் இலக்கியன் பேசுகையில்; செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் இரண்டு பக்கங்களிலும் சில இடங்களில் முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் கால்வாய்களை, மழைக்காலம் வருவதற்கு முன்பு உடனடியாக முடிக்க வேண்டும். செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் பராமரிப்பு பணி மந்தகதியில் நடக்கிறது. இப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். செங்குன்றம் அண்ணா சிலை அருகில் வெளியூர் பேருந்து நிறுத்தம் பணி விரைந்து முடிக்க வேண்டும். தெரு மற்றும் சாலைகளில் எரியாத மின்சார விளக்குகளை எரிய வைக்க வேண்டும், கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து தொடர்ந்து அடித்து விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும், அவரவர் வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து உடனுக்குடன் நிறைவேற்றி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது, முன்னாள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களின் பெயர்களை காழ்ப்புணர்ச்சியோடு மாற்றி வரும் தவெக ஆட்சியாளர்களுக்கு, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் திமுக சார்ந்த கவுன்சிலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
