நாகப்பட்டினம்: மேகதாது பிரச்னையில் ஒன்றுபட்டு தமிழகத்தை அழிப்பதற்கு காங்கிரஸ் – பாஜ கைகோர்த்துள்ளதாக பிஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நாகப்பட்டினத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடகாவில் எதிர்கட்சி தலைவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழத்துக்கு விடுவிக்க கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகம் தண்ணீரை திறக்க மறுத்தால் காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் ஆணையம் ஒன்றிய அரசின் உதவியை ஆணையம் கோர வேண்டும். இதில் அவ்வாறு உதவி கோரும் பட்சத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று தர ஆணையத்திற்கு தேவையான உதவி வழங்க வேண்டும்.
காங்கிரஸ் மேகதாது அணை குறித்து தமிழக எம்பிக்களோடு கலந்து பேசுவதாக கூறி டெல்லியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அழைத்தால் திமுக, அதிமுக பங்கேற்காது என்பதை தெரிந்து இருந்தும் திட்டமிட்டு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பிரிவினையை உருவாக்கும் நிலையில் கூட்டம் நடைபெற்றது . இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடையை உருவாக்கியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜ இரு துருவங்களாக இருந்தாலும், மேகதாது பிரச்னையில் ஒன்றுபட்டு தமிழகத்தை அழிப்பதற்கு கைகோர்த்துள்ளனர். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை பிளவு ஏற்படுத்தி கர்நாடகாவிற்கு ஆதரவான மறைமுக சதியில் தமிழக காங்கிரஸ் கட்சி ஈடுபடுதோ? என விவசாயிகள் அஞ்சுகிறார்கள். இது மாதிரியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி கைவிட வேண்டும். காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை மூலமாக ஆணையத்தின் உத்தரவு ஏற்று தண்ணீரை திறக்க கர்நாடக முதலமைச்சருக்கு உரிய அறிவுரைகளை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
