×

இரண்டாம் மண்டல பாசனத்தில் விவசாயத்துக்கு சீராக தண்ணீர் கிடைக்க கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

*முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சப்- கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து விவாதித்து மனுக்களை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், ‘‘திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்டமாக இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்புக்கு முன்பாக, அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் இருந்தாலும், விரைவில் அதற்கான நாள் தெரிய வரும்.எனவே, திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பு, விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள கால்வாய்களை விரைந்து சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது கால்வாய்களை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்பணி முழுமையாகாமல், கிடப்பில் போடப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்த முறையாவது, பாசன கால்வாய்களை விரைந்து தூர்வாரி அப்பணியை முழுமைப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் திறப்பின் போது, தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஏபி பாசனத்திற்கு உட்பட்ட கால்வாய் அருகே ஆக்கிரமிப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிவர்த்தி செய்ய வேண்டும் ” என தெரிவித்தனர்.

Tags : Pollachi ,Sub-Collector ,Office ,Ramakrishnasamy ,Vasudevan ,
× RELATED 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு...