×

நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு கடைசி இடம்: அமைச்சர், டிஜிபி புறக்கணிப்பு: தமிழுக்கு அவமதிப்பு என கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

 

நெல்லை: தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. இது, தமிழுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர், டிஜிபி ஆகியோர் புறக்கணித்தனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில், முதலில் வந்தே மாதரம் அடுத்து தேசிய கீதம், 3வதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும். இது, கவர்னர் மாளிகையில் இருந்து வந்த கண்டிப்பான உத்தரவு என துணைவேந்தர் சந்திரசேகர் கூறியிருந்தார்.

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் துணைவேந்தருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இதனால், இந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன். இதற்கான அழைப்பிதழை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன் என்று கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன், துணை வேந்தருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதேபோல், இந்த விழாவை தானும், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரும் புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக நெல்லை காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ் தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பட்டம் பெறும் மாணவ, மாணவிகள், பதக்கம் பெறும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் என அனைவரும் காலை 9 மணிக்கே அரங்கத்திற்கு வந்து அமர்ந்திருந்தனர். மொத்தம் 758 பேர் பிஎச்டி முனைவர் பட்டமும் (595 மாணவிகளும், 163 மாணவர்களும்), பல்வேறு துறைகளில் தங்க பதக்கம் வென்ற 113 பேருக்கும் (101 மாணவிகள், 12 மாணவர்கள்) என மொத்தம் 871 பேர் கவர்னர் கையால் பட்டம் பெற ஏற்பாடு செய்யப்பட்டருந்தது.

விழா தொடங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக, காலை 10 மணிக்கு திடீரென துணைவேந்தர் சந்திரசேகர், பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே கவர்னர் பட்டங்களை வழங்குவார். பிஎச்டி பட்டம் பெறும் 758 பேருக்கு தானும், பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் சிறப்பு விருந்தினரும் பட்டம் வழங்குவோம் என அறிவித்தார். துணைவேந்தரின் இந்த அறிவிப்புக்கு முனைவர் பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும், கவர்னர் பட்டம் வழங்கவில்லை என்றால் அந்த பிஎச்டி பட்டம் எங்களுக்கு தேவையில்லை.

கவர்னர் பட்டம் வழங்குவதாக கூறி அழைத்து விட்டு, மேடைக்கு கூட அனுமதிக்காமல் துணைவேந்தர் பட்டம் வழங்குவதா, அந்த பட்டத்தை நாங்கள் பெற மாட்டோம். நாங்கள் அரங்கை விட்டு வெளியேறுவோம் என போர்க்கொடி தூக்கினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னரின் உடல் நிலை காரணமாக அவர் அனைவருக்கும் பட்டம் வழங்க முடியாது என துணைவேந்தரும், உடனிருந்த பேராசிரியர்களும் சமாளித்தனர். ஆனாலும் கூச்சல், குழப்பம் அடங்கவில்லை.

துணைவேந்தரின் சமாதானத்தை ஏற்க மறுத்து பிஎச்டி பட்டத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், இந்த அரங்கை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம் என்றனர். இதையடுத்து பட்டமளிப்பு விழா அரங்கம் பூட்டப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் மாளிகையுடன் பேசி விட்டு அறிவிப்பதாக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார். சிறிது நேரத்தில் கவர்னரின் செயலாளர் சஜ்ஜன்சிங் சவான், அனைவருக்கும் கவர்னரே பட்டம் வழங்குவார் என அறிவித்தார். அதன் பிறகே போராட்டத்தை கைவிட்டு அமைதி அடைந்தனர். இந்த களேபரத்தால் 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய பட்டமளிப்பு விழா 45 நிமிடங்கள் தாமதமாக 11.15 மணிக்கு தான் துவங்கியது. தொடக்கமாக மாணவிகளால் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. பின்னர் இரண்டாவதாக தேசிய கீதம், 3வதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

பொதுவாக இதுவரை நடந்த பட்டமளிப்பு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். விழாவின் நிறைவில் தேசிய கீதம் பாடப்படும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் வந்தே மாதரம் விழாவின் தொடக்கத்திலும், 2வதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அப்போது விளக்கமளித்த அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளில் இனி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், நேற்று தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இந்த உலகிற்கு தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு அவமதிக்கப்பட்டது மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் விழாவுக்கு கவர்னர் அர்லேகர் தலைமை வகித்து 758 பிஎச்டி மாணவர்களுக்கும், தங்க பதக்கம் வென்ற 113 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக துணை வேந்தர் மதுசூதன குருப் பட்டமளிப்பு உரையாற்றினார். இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், நெல்லை காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் புறக்கணித்தனர்.

மேலும், போலீஸ் மேலாண்மை பாடத்தில் குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறை பிரிவில், பிஎச்டி பட்டம் பெறுவதாக இருந்த தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விழாவில் நேரடியாக பங்கேற்று பட்டம் பெறுவதை தவிர்த்து விட்டார். இதேபோல் மும்பை தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகசுதா மேலாண்மை கல்வியிலும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்.கோர்ட் சீனியர் சிவில் நீதிபதி திரிவேணி மனித உரிமை பாடத்திலும் நேரடியாக முனைவர் பட்டம் பெறாமல் புறக்கணித்தனர்.

* பட்டம் வழங்க மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டார் கவர்னர்

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேகர் பேசுகையில், ‘‘இங்கு நடந்த சம்பவங்களுக்காக (அனைவருக்கும் பட்டம் வழங்க மறுத்ததற்கு) நான் முதலில் மன்னிப்பு கோருகிறேன். இங்கு அமர்வதற்கு இடமின்றி அரங்கத்தின் வெளியே பலரும் உள்ளார்கள். அதற்காக நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் அனைவரையும் இங்கு அமர வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அடுத்த ஆண்டு அனைவரும் அமரும் வகையில் பெரிய இடத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்த துணைவேந்தரை கேட்டுக் கொள்கிறேன். இங்கே முனைவர் பட்டம் பெற்றவர்கள் துணைவேந்தரிடம் பட்டம் பெற மாட்டோம். கவர்னரிடம் தான் பட்டம் வாங்குவோம் என கூறியதாக என்னிடம் தெரிவித்தனர்.

வேந்தர் கையால் பட்டம் பெறுவது உங்களுடைய உரிமை. அது தவறு இல்லை. அதை வேந்தர் புறந்தள்ளி விட முடியாது. ஏனெனில் இந்த பட்டம் பெறுவதற்கு நீங்கள் இரவு, பகலாக உழைத்துள்ளீர்கள். நான் உங்களுடைய திறமையையும், முயற்சியையும் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். உங்கள் அமைதியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். கவர்னர் மாளிகைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான தவறான புரிதல் காரணமாக நீங்கள் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. கவர்னர் மாளிகையிடம், இந்த சம்பவம் நிகழ்ந்து விடும், அந்த சம்பவம் ஏற்பட்டு விடும் என கருத்து தெரிவித்தனர். தகவல் பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டு விட்டது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.இவ்வாறு கவர்னர் அர்லேகர் பேசினார்.

* போராட்டத்தை தடுக்க கமாண்டோ,அதிரடிப்படை போலீஸ் குவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை காரணமாக நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தலாம் என்ற பதற்றம் காரணமாக டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் அதிரடிப்படை போலீசார், கலவரத்தை தடுக்கும் கமாண்டோ போலீசார் நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். கவர்னரை நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் அனுப்பி வைக்கும் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

* நாடு முழுவதும் தமிழ்நாட்டின் கலாசாரம் பரவ வேண்டும்: கவர்னர் பேச்சு

‘‘இளம் தலைமுறையினர் குறித்து தவறாக பேசப்படுகிறது. ஜென்ஸி தலைமுறையினர் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது போராட்டத்தின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், இங்கே உங்களிடம் இருக்கும் பண்பாடு, கலாச்சாரம் அவர்களிடம் இல்லை. தமிழகத்திலிருக்கும் இந்த கலாச்சாரம் நாடு முழுவதும் பரவ வேண்டும்’’ என்று விழாவில் கவர்னர் அர்லேகர் பேசினார்.

Tags : Nella University Graduation ,DGP ,Tamil Nelya University ,Nella Manonmaniam Sundaranar University ,Department of Higher Education ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு !