×

தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் குன்னூரில் புதர் மண்டிய நீர்நிலைகளை சீரமைக்க கோரிக்கை

குன்னூர் : தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் குன்னூரில் புதர் மண்டிய நீர்நிலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் அது தீவிரமாகாமல் போக்கு காட்டி வருகிறது.

விரைவில் கனமழை பெய்யும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய ஆறு மற்றும் ஓடைகள் புதர் மண்டி, தண்ணீர் செல்வதற்கு வழியின்றி காணப்படுவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

​குன்னூர் நகராட்சியில் டார்லிங்டன் பிரிட்ஜ் பகுதி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பகுதியில் உள்ள ஓடையில் அதிக அளவில் செடிகள், புதர்கள் மற்றும் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஓடையின் நீர் ஓட்டம் முழுமையாக தடைப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் ஓடை புதர் மண்டி கிடப்பதால், மழைநீர் சீராக செல்ல வழியின்றி, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.​பருவமழை தீவிரமாகும் முன்பே இந்த ஓடையை சீரமைக்க வேண்டும் என்று டார்லிங்டன் பிரிட்ஜ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் குன்னூர் நகராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

​“ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த ஓடையில் வெள்ளம் வந்து, தண்ணீர் எங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இந்த ஆண்டும் மழைக்காலம் வரப்போகிறது, ஆனால் இன்னும் ஓடை சுத்தம் செய்யப்படவில்லை. புதர்கள் அதிகமாக இருப்பதால், தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓடையை சீரமைக்க வேண்டும்,” என்று அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

டார்லிங்டன் பிரிட்ஜ் பகுதி மட்டுமல்லாது, குன்னூர் நகராட்சியில் உள்ள மேலும் பல இடங்களிலும் இதே நிலை நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ​பருவமழை காலங்களில் நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி, தண்ணீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டு எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Tags : Kunnur ,Gunnar ,
× RELATED மாணவர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது;...