×

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அறிவியல் பூங்காவை திறக்க கோரிக்கை

ஊட்டி : ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்கா மட்டுமின்றி, ஊட்டியில் நகராட்சி சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய பூங்காக்கள் உள்ளன.

இவைகள் அனைத்துமே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. இதனை முறையாக பராமரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சில ஆண்டுகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பெரும்பாலான பூங்காக்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், புதர்கள் மண்டி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் மாறியது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சுமார் ரூ. ஒரு கோடியில் டேவிஸ் பூங்காவை சீரமைத்தது.ஆனால், பஸ் நிலையம் அருகே உள்ள சிறிய பூங்கா திறக்கப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது.இதனால் இது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்நிலையில், இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவில் நாள்தோறும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கும் வகையிலும், குறிப்பாக குழந்தைகள் பார்க்கும் வகையிலும் அதே சமயம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காக இதனை அறிவியல் பூங்காவாக மாற்றத் திட்டமிட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த பூங்கா முழுவதிலும் இருந்த முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கு பல்வேறு அறிவியல் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், டைனோசர் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பூங்காவை கண்டு ரசித்து வந்தனர். ஆனால் தற்போது இந்த பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவை மீண்டும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Ooty Central Bus Stand ,Ooty ,Botanical Garden ,
× RELATED மாணவர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது;...