×

சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்

*பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க கோரிக்கை

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதி பகுதி வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து, கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையில் உள்ளது.

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கும், இதன் வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் தொற்றுநோய் பரவும் நிலையில் உள்ளதோடு, அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயிலுக்கு செல்லும்போது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சேதமான பாதாள சாக்கடை மூடியை சீரமைத்து சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cuddalore ,Thirupadhiripuliyur Theradi ,
× RELATED மாணவர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது;...