×

மெசேஜ் அனுப்பி பயத்தை உருவாக்குகின்றனர் ஓடிபி எண்ணை கேட்டு வங்கி கணக்கில் பணத்தை அபேஸ் செய்யும் மோசடி கும்பல்

*ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ஆரணி : வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அண்மைக்காலமாக ‘வங்கி கணக்கு முடக்கப்படும்’ என்ற போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அண்மைக்காலமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் திட்டமிட்டு மோசடி செய்து வருகின்றன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

‘உங்கள் வங்கியின் கேஒய்சி விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை, பான் கார்டு இணைக்கப்படவில்லை, மின்சார பில் கட்டவில்லை என்றால் இன்று இரவே மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்கள் ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டுள்ளது’ என்பது போன்ற குறுஞ்செய்திகள் நுகர்வோரின் கைபேசிக்கு அனுப்பப்படுகின்றன. அதன் கீழே ஒரு குறிப்பிட்ட மொபைல் எண் அல்லது இணையதள லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் பயந்துபோய் அந்த எண்ணை அழைக்கும்போது, தங்களை வங்கி அதிகாரிகள் அல்லது வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதிகள் போல அறிமுகப்படுத்தி கொள்ளும் மோசடியாளர்கள், மிகவும் சாதுரியமாக பேசி நுகர்வோரின் வங்கி அட்டை எண், சிவிவி எண் மற்றும் கைபேசிக்கு வரும் ஓடிபி ரகசிய எண்களை பெற்று, சில நொடிகளில் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.

பொதுமக்கள் தங்களின் உழைப்பின் பயனை ஆன்லைன் திருடர்களிடம் இழக்காமல் இருக்க முக்கிய விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ வாடிக்கையாளர்களின் ஓடிபி, ஏடிஎம் பின், சிவிவி அல்லது இணைய வங்கி கடவுச்சொற்களை ஒருபோதும் கேட்காது. யாராவது கேட்டால் அவர் 100 சதவீதம் மோசடி நபர் என்பதை நுகர்வோர் உணர வேண்டும்.

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யக்கூடாது. அவை உங்கள் போனை ஹேக் செய்ய பயன்படும் உளவு செயலிகளாக இருக்கலாம். வங்கிகளின் உதவி எண்கள் தேவைப்பட்டால், கூகுள் தேடலில் வரும் எண்களை தொடர்பு கொள்ளக்கூடாது.

உங்களின் வங்கி பாஸ்புக் அல்லது ஏடிஎம் கார்டின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை மட்டுமே அழைக்க வேண்டும். கணக்கு முடக்கம் தொடர்பான தகவல்கள் வந்தால் பதற்றமடையாமல், உடனடியாக உங்கள் வங்கியின் உள்ளூர் கிளை மேலாளரை நேரில் சந்தித்து உண்மை தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் இதற்கெனத் தனி சைபர் கிரைம் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்திருந்தால், முதல் மூன்று மணி நேரத்திற்குள் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணை அழைக்க வேண்டும்.

அல்லது ‘www.cybercrime.gov.in’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனே புகார் அளிக்க வேண்டும். இந்த பொன்னான நேரத்தில் புகார் அளித்தால், மோசடி கும்பலின் கணக்கிற்கு சென்ற பணம் உடனடியாக முடக்கப்பட்டு, நுகர்வோருக்கு பணம் திரும்ப கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்

பொதுமக்கள் செல்போனுக்கு வரும் எந்தவொரு ஓடிபி எண், ஏடிஎம் கார்டு எண், அதன் பின்புறம் உள்ள சிவிவி எண் ஆகியவற்றை தெரிந்தவர்களிடமோ அல்லது வங்கி அதிகாரிகள் என்று கூறுபவர்களிடமோ ஒருபோதும் வாய்மொழியாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ பகிரக்கூடாது.

அதேபோல் ‘உங்கள் கணக்கு முடக்கப்படும், மின் இணைப்பு துண்டிக்கப்படும், பரிசு விழுந்துள்ளது’ என்று கூறி வரும் எந்தவொரு குறுஞ்செய்தி மற்றும் அதில் இருக்கும் இணையதள லிங்க்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யக் கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

முதியவர்களை குறிவைத்து நூதனம்

ஆன்லைன் மோசடி கும்பல்களின் மிக எளிதான இலக்காக முதியவர்களே இருக்கிறார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓய்வூதியம் பெறும் முதியவர்களை குறிவைத்து நூதன மோசடிகள் அரங்கேறுகின்றன.

‘உங்கள் லைப் சர்டிபிகேட் சமர்ப்பிக்கவில்லை, உடனே இந்த லிங்கை கிளிக் செய்யாவிட்டால் பென்ஷன் வராது’ என்று யாராவது போனில் சொன்னால் முதியவர்கள் அதை நம்ப வேண்டாம்.

பிஎப் பணம் அல்லது பணி ஓய்வுக் கால பலன்கள் வங்கி கணக்கிற்கு வந்தவுடன், அதனை பறிக்க போலி முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரிலும் அழைப்புகள் வரலாம். வங்கி கணக்கு அல்லது மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், முதியவர்கள் நீங்களாக எந்த முடிவும் எடுக்காமல் உங்கள் பிள்ளைகள் அல்லது நம்பகமான உறவினர்களின் உதவியை நாட வேண்டும். உங்களுக்கு பணம் எடுத்து தரும் உதவியாளர்களிடமோ, அல்லது வங்கி ஏடிஎம் வாசலில் நிற்பவர்களிடமோ உங்களது ஏடிஎம் கார்டு ரகசிய எண்ணையோ அல்லது ஓடிபி எண்களையோ வாய்மொழியாக கூட தெரிவிக்கக்கூடாது.

Tags : Arani ,Vellore ,Tiruvannamalai ,Tirupattur ,Ranipet ,
× RELATED நாட்றம்பள்ளி அருகே ஆபத்தான முறையில்...