×

வண்டலூர் பகுதியில் கனமழை: மின்னல் தாக்கி தென்னை மரங்கள் எரிந்தன

 

கூடுவாஞ்சேரி, ஜூலை 28: வண்டலூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. கீரப்பாக்கத்தில் இடி விழுந்ததில் 2 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. பல இடங்களில் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் திடீரென கனமழை பெய்தது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பஸ் ஏற வந்த பயணிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இந்நிலையில், வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் கிராமம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் அங்குள்ள இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனை கண்டதும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடிப்போய் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Vandalur ,Kuduvancheri ,Keerappakkam ,Tamil Nadu ,
× RELATED 30 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு