சுரண்டை, ஜூலை 28: சுரண்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவிகள் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது ேபாலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகளின் பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள வீ.கே.புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தேன் மரிய சுகந்தி (44) என்ற ஆசிரியை 11ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தினமும் மாலையில் சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி தேன் மரிய சுகந்தி தனது வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அருகேயுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் சத்தமாக பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை தேன் மரிய சுகந்தி அருகேயுள்ள வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளை பிரம்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிகள் பவித்ரா, சுஜித்ரா, சரண்யா, சாய், ஆஷா, சந்தன முத்துமாரி உள்பட 10க்கும் மேற்பட்ட மாணவிகள் கைகளில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாணவிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவி பவித்ராவின் தாயார் வீ.கே.புதூரை சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜாத்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 22ம் தேதி ஆசிரியை மீது வீ.கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே மாணவி பவித்ரா மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 3 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றதாகவும், மாணவி சுஜித்ரா ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவிகளில் சரண்யா, சாய், ஆஷா, சந்தனமுத்துமாரி ஆகிய மாணவிகள் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கைகளில் இன்னும் வீக்கம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவிகளை ஆசிரியை அடித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவிகளின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவிகள் பவித்ரா, சுசித்ரா ஆகியோரின் பெற்றோர் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் பெண் குழந்தைகளை ஆசிரியை தேன் மரியசுகந்தி எந்த கேள்வியும் கேட்காமல் கடுமையாக தாக்கியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.கலெக்டர் இதனை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளனர்.
