நெல்லை ஜூலை 28: கொள்முதல் செய்த நெல்லுக்கு 4 மாதங்களாக பணம் வழங்காததை கண்டித்து நெல்லையில் கலெக்டர் அலுவலக குறைதீர்ப்பு கூட்ட அரங்கில் விவசாயிகள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகளும், மானூர் வட்டார விவசாயிகளும் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாய சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 4 மாதங்களாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்க வேண்டி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். தொடர் மனுக்கள் அளித்தும் இன்று வரை உரிய பணம் வராமல் உள்ளது.
இதனால் எங்களுடைய விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட ஒன்றிய அரசின் கொள்முதல் நிலைய அதிகாரியிடம் பேசி விவசாயிகளுக்கு பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வரும் 3ம் தேதி மானூர் தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மானூர் வட்டார குழு தலைவர் இலோசியஸ், செயலாளர் முத்துராஜ் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியில் ஒன்றிய அரசின் மூலம் கொள்முதல் செய்த நெல்லுக்கு இன்னமும் பணம் வந்து சேரவில்லை.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட வேலை நடக்காமல் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த பணத்தை வட்டியுடன் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து மனு கொடுக்கும் இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனந்த் மோகன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒன்றிய அரசின் நெல் கொள்முதல் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு 7 நாட்களுக்குள் பணம் செலுத்துமாறும், இல்லையெனில் விவசாயிகள் பிரச்னை தீர்க்க, கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வருமாறும் அறிவுறுத்தினார். இதையடுத்து விவசாயிகள், போராட்டத்தை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
