விருதுநகர், ஜூலை 28: காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்திற்கு அரசுப் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தியிடம் நேற்று மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், முஷ்டக்குறிச்சி அருகே நாகனேந்தல் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் கூலித்தொழில் மற்றும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிரமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் காரியாபட்டி உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று பள்ளிகளில் படிக்க பேருந்து வசதி இல்லை.
இதன் காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, நீண்ட நேரம் காத்திருந்து மாற்றுபேருந்தில் ஏறி செல்லும் நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் காலதாமதமாக பள்ளிக்கச் செல்லும் நிலை தொடர்ந்து நிலவுகிறது. மேலும் விவசாயிகளும் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை உரிய நேரத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாகனேந்தல் கிராமத்திற்கு அரசுப் பேருந்து வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
