- கோவம் ஆட்டு
- படிகுபம்
- நேப்பியர் பாலம்
- அமைச்சர்
- என் ஆனந்த்
- சென்னை
- ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
- கோவம் நதி
- கோவம் ஏரி
- திருவள்ளூர் மாவட்டம்
சென்னை: பாடிகுப்பம் முதல் நேப்பியர் பாலம் வரை கூவம் ஆற்றுப்பகுதியில் தூர்வாரும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஏரியில் இருந்து கூவம் ஆறு உருவாகி அதனுடன் கேசவரம் அணைக்கட்டில் இருந்து வரும் பழைய பங்காரு கால்வாய் வழியாக இணைந்து அதன் கீழ் நீரோட்டம் பாதையில் 72 கி.மீ பாய்ந்து சென்னை நேப்பியர் பாலம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
சென்னை பெருநகர எல்லையில் திருவேற்காட்டில் இருந்து கோயம்பேடு, அமைந்தகரை, சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதிகள் வழியாக சுமார் 21 கி.மீ பாய்ந்து இறுதியாக கடலில் கலக்கிறது. சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைகள், மிதவை தாவரங்கள் மற்றும் மிதவை பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
கூவம் ஆற்றில் பாடிகுப்பம் கீழ் நீரோட்டப்பாதை முதல் நேப்பியர் பாலம் வரை மற்றும் கூவம் வடக்குப்பிரிவு ஆற்றை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை பெருநகர பகுதிகளான பாடிகுப்பம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கூவம் ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஆகும்.
சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமத்தில் ஒக்கியம் மடுவு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மடுவானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் மழை வெள்ளநீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக கொண்டு சென்று கடலில் வடிய செய்கிறது. இந்த மடுவிற்கு மேற்புறமுள்ள 62 ஏரிகளின் உபரிநீர் வந்தடைகிறது. இந்த மடுவின் வெள்ளநீர் கடத்தும் திறன் 12,000 கன அடி ஆகும். ஒக்கியம் மடுவானது 2.65 கி.மீ நீளத்திலும் அதன் அகலம் 80 மீட்டரில் இருந்து 140 மீட்டர் வரை மாறுபட்ட அளவுகளிலும் உள்ளது. ஒக்கியம் மடுவில் ஆகாயத்தாமரை படர்ந்த நிலையில் உள்ளதால், இந்த மடுவின் வெள்ள நீர் கடத்தும் திறன் குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணியை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சபரிநாதன், ரேவந்த் சரண், பாலமுருகன், அருள் பிரகாசம், சரவணன், நீர் வளத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் கவுஷிக், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், தலைமை பொறியாளர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
* நெரிசலில் சிக்கியதால் பைக்கில் சென்ற அமைச்சர் என்.ஆனந்த்
நேற்று காலை 11 மணிக்கு கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் ஆனந்தின் கார் செல்ல முடியவில்லை. உரிய நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகும் என்பதால், உடனடியாக கட்சி நிர்வாகி ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு தூர்வாரும் பணி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார். அமைச்சரான நிலையிலும் என்.ஆனந்த் டிராபிக் சிக்னலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அமைச்சர் பைக்கில் வந்ததால் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பாதுகாவலர்கள் பின்னாடியே ஓடி வந்தனர்.
