×

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி: நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதியளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிகாலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ராம் பிராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் 2024 செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : minister ,Vaithilingam ,Chennai ,Chennai Primary Sessions Court ,Anti-Corruption Department ,AIADMK ,Housing Department… ,
× RELATED முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர்...