×

திறந்து 12 நாட்களில் அவலம் ரூ.4200 கோடியில் அமைக்கப்பட்ட உபி விரைவு சாலையில் விரிசல்

 

உன்னாவ்: உத்தரப்பிரதேசத்தில் ரூ. 4,200 கோடி மதிப்பிலான விரைவுச் சாலை திறக்கப்பட்ட 12 நாட்களிலேயே அதில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ரூ. 4,200 கோடி செலவில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ-கான்பூர் கிரீன்பீல்ட் தேசிய உயர்மட்ட விரைவுச் சாலை, ஜூலை 13 அன்று முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் ஜூலை 25 அன்று நிலைமை மாறியது. சாலையின் ஒரு பெரிய பகுதி உள்வாங்கிச் சரிந்தது. திறப்பு விழா நடந்து 12 நாட்களே ஆன நிலையில் உன்னாவ் பகுதியிலிருந்து வெளியான இந்தக் காட்சிகள் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

கொராரி கிராமத்திற்கு அருகில் சாலையின் சுமார் 5 முதல் 7 மீட்டர் வரையிலான பகுதி உள்வாங்கிச் சரிந்துவிட்டதாகக் கூறி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் மதுசூதன் யாதவ் அந்த விரைவுச் சாலையின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,’நான் லக்னோ-கான்பூர் உயர்மட்ட விரைவுச் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​கொராரி பகுதியை அடைந்ததும் மழையால் சாலையில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டேன்’ என்று கூறிய அவர் சாலையில் உள்ள விரிசல்களைச் சுட்டிக்காட்டினார்.

இந்த விரிசல் இத்திட்டத்தின் கட்டுமானத் தரம் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இன்னும் பதிலளிக்கவில்லை. இத்தகைய விரிசல்கள் விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று கவலை தெரிவித்த மதுசூதன் யாதவ், இத்திட்டத்தில் அரசு ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். வீடியோ வெளியானதையடுத்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு, பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கினர்.

Tags : Cracks ,UP Expressway ,Unnao ,Uttar Pradesh ,Lucknow-Kanpur Greenfield National High-Level Expressway ,
× RELATED போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில்...