ராஜ்கோட்: துபாயில் இருந்து மும்பை நோக்கி 194 பேருடன் இண்டிகோ விமானம் நேற்று வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, சரக்குகள் வைக்கும் பகுதியில் இருந்து புகை வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, விமானி எச்சரிக்கை விடுத்ததும் விமானம் குஜராத்தின் ராஜ்கோட்டிற்கு திருப்பி விடப்பட்டது.
அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, விமானம் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிற்பகல் 3.27 மணி அளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. உடனடியாக 194 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புகைக்கான காரணத்தை கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை ஆய்வு செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
